நவபிருந்தாவனங்களில் ஒன்றான ஶ்ரீ வியாராஜர் பிருந்தாவன் உடைப்பு, பக்தர்களின் உடனடியான புனர்-நிர்மாணம்!
நவபிருந்தாவனங்களும், அவற்றில் ஒன்று சேதப்படுத்தலும்: கர்நாடகா மாநிலம், கோப்பல் மாவட்டம் அனேகண்டியில் [ಆನೆಗೊಂದಿ, ஆனேகூந்தி] உள்ளது, பிரசித்திபெற்ற நவ பிருந்தாவனம். துங்கபத்ரா நதிக்கரையோரம் அமைந்துள்ள இத்தீவு பகுதியில், மத்வ ஆசார்யர்களின் ஒன்பது பேரின் –பிருந்தாவனங்கள் அமைந்துள்ளன.
1. ஸ்ரீ பத்மநாப தீர்த்தர்,
2. ஸ்ரீ ஜய தீர்த்தர், 3. ஸ்ரீ கவீந்த்ர தீர்த்தர்,
|
4. ஸ்ரீ வாகீச தீர்த்தர்,
5. ஸ்ரீ வியாசராஜர், 6. ஸ்ரீ ஸ்ரீநிவாச தீர்த்தர்,
|
7. ஸ்ரீ ராமதீர்த்தர்,
8. ஸ்ரீ சுதீந்த்ர தீர்த்தர், 9. கோவிந்த தீர்த்தர் |
ஆகிய ஒன்பது மடாதிபதிகளின் – மாத்வ குரு பரம்பரையில் அவதரித்த ஒன்பது மாத்வ ஆசார்யர்களின் பிருந்தாவனங்களே, நவ பிருந்தாவனங்கள் என்று அழைக்கப்பட்டு பக்தர்களால் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இவற்றில், 17-07-2019 புதன் கிழமை இரவு, ஶ்ரீ வியாசராஜர் என்கின்ற மத்வ மகானின் பிருந்தாவனம்-சமாதி சேதப் படுத்தப் பட்டது.
ஶ்ரீவியாசராஜரின் பிருந்தாவனம் சேதப் படுத்தப் பட்டது ஏன்?: இதில்தான் கடந்த ஜூலை 17-ம் தேதி நள்ளிரவு வியாசராஜா [1490-1539) CE] என்கிற மகானின் சமாதியைப் பெயர்த்து எடுத்துள்ளனர் மர்ம நபர்கள்[1]. இவர் ஶ்ரீகிருஷ்ண தேவராயரின் ஆன்மீக குரு ஆவர். புரந்தர தாஸர், கனக தாஸர் போன்றோர் இவரது சீடர்கள் ஆவர். அவரின் சமாதிக்கு அருகே மர்ம நபர்கள் பயன்படுத்திய பூஜைப் பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன[2]. கொள்ளையடிக்க, பிருந்தாவனத்தை இடித்து சேதப் படுத்த, பூஜை செய்தா செய்வார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் என்ன தேடினார்கள்? தேடியது கிடைத்ததா? என்பதும் மர்மமாகவே உள்ளது. இப்படி ஊடகங்கள், யூகத்தின் மீது, கதை அளந்தாலும், துலுக்கர் மற்றும் ஆங்கிலேயர், மொத்தமாக கொள்ளையடித்தப் பிறகு, என்ன மிஞ்சியிருக்கும் என்று தெரியவில்லை.
புதையல் தேடி சேதப்படுத்தினரா?: இதுகுறித்துப் பேசிய நவ பிருந்தாவனம் பகுதியைச் சேர்ந்தவர்கள், “ராகவேந்திரரின் முற்பிறவியாக அறியப்படுவர் விஜயராஜர். விஜயநகரப் பேரரசு முடிவுறும் தறுவாயில், அதன் தலைநகரமான ஹம்பியிலிருந்து தங்கக் கட்டிகள், வைர வைடூரியங்கள் ஆகியவற்றை மாட்டு வண்டிகளில் பல்வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக ஹம்பி பகுதி மக்களால் இன்றும் நம்பப்படுகிறது[3]. இப்புதையல்கள் மகான்களின் பிருந்தாவனங்களில் மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதி, அவற்றைக் கொள்ளையடிக்கும் முயற்சி கடந்த 400 ஆண்டுகளாகத் தொடர்கிறது[4]. பிறகு எப்படி, போலீஸார் முதலியோர் கண்டுகொள்ளாமல் இருந்தனர் என்று தெரியவில்லை. அப்படிப் புதையல் தேடி வந்தவர்கள்தான், மகான் வியாசராஜரின் சமாதியை உடைத்துத் தேடியுள்ளனர். அதுவும் குரு பூர்ணிமா அன்று, சமாதிக்கு நள்ளிரவு பூஜைகளைச் செய்துவிட்டு உடைத்துள்ளனர். அவர்கள் என்ன எடுத்தார்கள், எங்கே சென்றார்கள் என்பதெல்லாம் மர்மமாகவே உள்ளது.
பக்தர்கள், மடாதிபதிகள் சோகமடைந்தது, கண்டித்தது: உத்திராதி, ராகவேந்திர மடங்களுக்கு இடையே இந்த நவபிருந்தாவனத்திற்கு உரிமை கோரும் வழக்கு நடைபெற்றுவருகிறது. இதனால், பாதுகாக்க ஆள் இல்லாமல் நவபிருந்தாவனம் அந்தரத்தில் நிற்கிறது” என்றனர். சம்பவம் குறித்து பேசியுள்ள கோப்பல் மாவட்டக் காவல் துறை எஸ்.பி.ரேணுகா சுகுமார், “துறவிகளின் சமாதி அமைந்துள்ள பகுதிக்கு, படகில் மட்டுமே செல்ல முடியும். மாலை 4:30 மணியுடன் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்-ட நிலையில், முன்னதாகவே நவபிருந்தாவனம் சென்றுள்ள மர்ம நபர்கள், அங்கேயே இரவு தங்கியுள்ளனர். நள்ளிரவு தாண்டியவுடன் வியாசராஜாரின் சமாதிக்குப் பூஜைகளைச் செய்து, சமாதியை இரண்டு முதல் மூன்று அடிவரையில் தோண்டியுள்ளனர். இப்பகுதியில் சி.சி.டி.வி. கேமராவோ, பாதுகாவலர்களோ இல்லாததால், அவர்கள் யார்? என்ன பொருளைத் தேடி வந்தார்கள், எதையாவது எடுத்தார்களா போன்ற விவரங்கள் தெரியவில்லை. கங்காவதி காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து விசாரித்துக் கொண்டிருக்கிறோம்” என்றார். பிருந்தாவன் சிதைக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்ட பல்வேறு மடாதிபதிகள், ஆர்வலர்களைக் கொண்டு 15 மணிநேரத்திலேயே அதை மீண்டும் நிர்மாணித்துள்ளனர். ஏற்கெனவே பி.ஜே.பி-யால் கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் குமாரசாமி அரசு, இச்சம்பவத்தால் மேலும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது: காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் கங்காவதி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து நிலைமையை ஆய்வு செய்துவருகின்றனர். தற்போது அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்துக் கருத்து தெரிவித்த உத்தராதி மடத்தைச் சேர்ந்த ஸ்ரீபாத சுவாமிகள், தன் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். அவர் மாநில அரசுக்கு விடுத்த கோரிக்கையில் முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். செய்தி கேள்விப்பட்டவுடன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து பக்தர்கள் அநேகம் பேர் அங்கு திரண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சூட்சும சரீரமாக இருந்து தர்மத்தைக் காத்துநின்ற இந்த மஹானின் சந்நிதி அடியோடு தகர்க்கப்பட்டது குறித்த தங்களின் வருத்தத்தைச் சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துவருகிறார்கள்.
18-07-2019 பணி ஆரம்பித்து 19-07-2019 அன்று பணி முழுமையடைந்தது: பக்தர்களும், மடாதிபதிகளும் தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, கண்டனத்தை தெரிவித்துள்ளனர்[5]. அதுமட்டும்மல்லாது, புனர்நிர்மாணப் பணிகளை பக்தர்களே ஆரம்பித்தார்கள்[6]. வியாழக்கிழமை பணி துவக்கப் பட்டு, வெள்ளிக்கிழமை, முழுமை அடைந்தது[7]. அனைத்து மத்வ மடாதிபதிகளும் வந்து, பூஜைகளை செய்து, பணி முழுமையை ஆசிர்வதித்தனர்[8]. பக்தர்கள் மகிழ்ச்சியில் கோஷைட்டனர். அரசு உதவி முதலியவை இல்லாமல், உடனே, பக்தர்களே களமிறங்கி, புனர்நிர்மாணம் செய்த பணி அனைவராலும் வெகுவாகப் பாராட்டப் படுகிறது. இதே உணர்வு, எழுச்சி முதலியவை இருந்தால், பழுதடைந்துள்ள எல்லா கோவில்களையும், இவ்வாறே புனர்நிர்மாணம் செய்து விடலாம், என்ற கருத்தும் வலுப்படுகிறது.
இந்த இடிப்பு, புனர்–நிர்மாணம் முதலியவற்றில் கவனிக்க வேண்டியவை: மேலேயுள்ள விவரங்களிலிருந்து, சில விசயங்களைக் கவனிக்கலாம்:
- நவபிருந்தாவனம் என்பது – ஒன்பது துவைத குருமார்களின் சமாதிகள் ஆனெகுன்டி என்ற இடத்தில், துங்கபத்ரா நதிக்கரையில் உள்ளது.
- ஶ்ரீ உத்தராதி மற்றும் ஶ்ரீ ராகவேந்திர மடங்கள் இங்கு ஶ்ரீ பத்மநாபர் ஆராதனை நடத்துவதில் சர்ச்சை கொண்டு நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளன.
- ஶ்ரீராகவேந்திரரை நம்பும் மடங்கள் கூட, ஶ்ரீ பத்மநாபர் ஆராதனையில், இவ்வாறு சண்டை போட்டுக் கொள்ளலாம் போலிருக்கிறது!
- இந்நிலையில் இப்பிருந்தாவனத்தை யாரோ உடைத்துள்ளனர், தோண்டியதால், தூண்கள் எல்லாம் தாறுமாறாக விழுந்துள்ளன.
- சாதுர்மாதம் விரத காலத்தில், ஆஸாட ஏகாதசி-குரு பூணிமாவிற்குப் பிறகு, இத்தகைய சம்பவம் நடந்திருப்பதால், பக்தர்கள் வேதனை அடந்துள்ளனர்.
- பிருந்தாவனத்தின் கீழேயெல்லாம் தோண்டி பார்த்திருப்பதால், போலீஸார், புதையல் வேட்டைக்காரர்களின் விசமச்செயலாக இருக்கும் என்கிறார்கள்.
- எது எப்படியாகிலும் மடங்கள் இனி ஒற்றுமையாக ஆராதனைகளை செய்தால் நல்லது, ஶ்ரீ பத்மநாபரும் மகிழ்வார், அருள்பாலிப்பார்!
- அங்கு சக்தி வாய்ந்த அனுமார் இருந்து கொண்டு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.
- சர் தாமஸ் மன்றோவிற்கு [1761-1827], ஶ்ரீ ராகவேந்திரர் காட்சியளித்தார், ஆனால், மற்றவர்களுக்கு இல்லை எனும்போது யோசிக்க வேண்டும்.
- ஜூலை 2018ல் மன்றோவின் ஐந்தாவது தலைமுறை, மந்திராலயத்திற்கு வந்து பிரசாதம் பெற்று, தியானித்துச் சென்றுள்ளனர்.
பக்தகள் செய்யும் கரசேவை, உழவாரப்பணி மகத்தானது: பக்தர்கள் தாமாகவே இறைசேவை என்ற ரீதியில் முன்வந்து செய்யும் சேவை மகத்தானது. இதனை, பக்தர்கள் புனிதமாகக் கருதுகின்றனர். ராமர் இலங்கைக்கு பாலம் கட்டியபோது, ஒரு சிறிய அணில் செய்த பணியை எடுத்துக் காட்டுவர். அதாவது, இறைப்பணியில் செய்யும் பணியை இறைவன் சமமாகவே ஏற்றுக் கொள்கிறார். சீக்கியர்கள் தங்களது நிலை எப்படியிருப்பினும், குருதுவாரத்தில் அத்தகைய சேவையை செய்வர். தண்டனை என்றாலும், கோவிலில் ஏதாவது ஒரு வேலையை செய்யச் சொல்லி, பிராயசித்தம் பெறச் செய்வர். இதே போன்று, மற்ற இடங்களிலும், பக்தர்கள் தாமாகவே இத்தகைய கரசேவையை, உழவாரப் பணியை நடத்தினால், பல கோவில்களை புதுப்பிக்கலாம். மெதுவாக பக்தர்களின் கவனத்தில், பராமரிப்பில், பாதுகாப்பில் வரும் போது, நடந்து வரும் ஊழல்கள், கொள்ளைகள் முதலியவற்றையும், படிப்படிப்படியாகக் குறைத்து, முழுவதுமாக நீக்கலாம்.
© வேதபிரகாஷ்
21-07-2019
[1] விகடன், கர்நாடகாவில் மஹான் ஸ்ரீ வியாசராஜரின் பிருந்தாவனம் மர்ம நபர்களால் இடிப்பு! – பக்தர்கள் அதிர்ச்சி, சைலபதி, Published:Yesterday at 10 AMUpdated:Yesterday at 10 AM
[2] https://www.vikatan.com/spiritual/temples/holy-worship-place-vandalized
[3] விகடன், மிரட்டும் புதையல் வேட்டை… நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள்..!- கர்நாடகாவில் அதிர்ச்சி, ந.பொன்குமரகுருபரன், Published:Yesterday at 9 PM. Updated:Yesterday at 9 PM,
[4] https://www.vikatan.com/news/crime/16th-century-brindavana-of-sri-vyasaraja-near-hampi-vandalised-by-unidentified-miscreants
[5] The Hindu, Reconstruction of demolished Brindavana of Vyasaraja Tirtha begins, STAFF REPORTER, KOPPAL, JULY 19, 2019 00:51 IST; UPDATED: JULY 19, 2019 00:51 IST
[6] https://www.thehindu.com/news/national/karnataka/reconstruction-of-demolished-brindavana-of-vyasaraja-tirtha-begins/article28566248.ece
[7] Deccan Herald, Devotees rebuild Vyasaraja Brindavana, DH News Service, Koppal , JUL 19 2019, 23:21PM IST UPDATED: JUL 19 2019, 23:47PM IST
[8] https://www.deccanherald.com/state/devotees-rebuild-vyasaraja-brindavana-748266.html