திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயில்: ஸ்தலபுராண விவரங்களும், சரித்திரமும்!
திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயில்: திருச்சிராப்பள்ளி, கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பராய்த்துறை எனும் திருத்தலம் அமைந்துள்ளது. முக்கொம்பு என்னும் சுற்றுலாப் பகுதியின் நுழைவு இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். கோவிலின் கிழக்கில் சுவாமி சித்பவானந்தரின் ஶ்ரீஇராமகிருஷ்ண தபோவனம் உள்ளது. மேற்கில் ஶ்ரீஇராமகிருஷ்ண குடில் உள்ளது. திருக்கோவிலின் வெளிச்சுற்று, உயர்ந்த மதிற் சுவர்களுக்கு இடையே இருக்கிறது. இருபுறமும் மலர்ச் செடிகளின் ஊடே நடுவில் கருங்கல் தள வரிசையில் நடந்து வந்தால், தென் மேற்கில் தனி சன்னிதியில் வீற்றிருக்கும் கன்னிமூலை கணபதியை தரிசிக்கலாம். வடமேற்கில் வள்ளி–தெய்வானை சமேத முருகப்பெருமான் தனிச்சன்னிதியில் கோவில் கொண்டுள்ளார். இது திருச்சி மாவட்டத்தில் குளித்தலை வட்டத்தில் உள்ள திருப்பராய்த்துறை கிராமத்தில் அமைந்துள்ளது. இறைவன் பிட்சாடனராய் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்கட்கு அருள்புரிந்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள மூன்றாவது சிவத்தலமாகும். முதலாம் பராந்தகன் காலத்தில் கட்டப்பட்ட சோழ நாட்டு மூன்றாவது தென்கரை ஸ்தலம்.

Thiruparaythurai – Vivekananda Primary school on LHS

Thiruparaythurai – mantap and entry, view from inside

Thiruparaythurai entrance

Thiruparaythurai entrance. Navavukkarasu

Thiruparaythurai entrance. Gnanasambandar

Thiruparaythurai entrance. Nagappa Chettiyar
பராய் மரம், காடு, முனிவர் முதலியன: பராய் மரக் காட்டில் இறைவன் எழுந்தருளி இருப்பதால் ‘பராய்த்துறை நாதர்’ என்றழைக்கப் படுகிறார். சமஸ்க்ரிதத்தில் ‘தாருகா வனம்’ என்றும் குறிப்பிடப்படுகிறது. ஒரு காலத்தில் இந்த இடம் பராய் மரங்கள் சூழ்ந்த காடாக இருந்திருக்கிறது. எனவே தான் ‘தாடுகாவனம்’ என்று வடமொழியில் அழைக்கிறார்கள். இறைவன் பராய்த்துறை நாதர் என்றும், தாருகாவன ஈசர் என்றும் மரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறார். இக்கோவிலின் நடுவில் மிகப் பழங்காலத்து பராய் மரம், சுற்றிலும் கம்பி வேலி இடப்பட்டு காணப்படுகிறது. அடியில் சிவலிங்கம் வீற்றிருக்க சிறிது இலைகளுடன் உயர்ந்து நிற்கிறது பராய் மரம். இந்த மரத்தின் இலைகளும், பட்டையும், வேரும் முழுவதும் மருத்துவ குணமுடைய பராய்மரம் தான் தலவிருட்சமாக உள்ளது. மற்ற எந்த ஆலயத்திலும் இல்லாது இங்கே மட்டும் தான் இந்த மரம் இருப்பதாக கூறப்படுகிறது.

Muvar sculptures and the Chettiyar
திருப்பராய்த்துறை ஸ்தல வரலாறு: முன்னொரு காலத்தில் இத்தலத்தில் தவம் செய்துகொண்டிருந்த தாருகாவன முனிவர்கள், தாங்களே அனைத்திலும் உயர்ந்தவர்கள் என்ற மமதையும், தாங்கள் செய்யும், வேள்விகளே முதன்மையானது என்ற ஆணவமும், தங்கள் பத்தினிகளே கற்புக்கரசிகள் என்கிற அகங்காரமும் கொண்டிருந்தனர். மேலும், இதனால் தாங்கள் இறைவனை துதிக்க வேண்டியதில்லை என்றும் ஆணவம். அவர்களுக்கு பாடம் புகட்ட சிவனும், மகாவிஷ்ணுவும் எண்ணினர். சிவபெருமான் காண்பவர்களைக் கவரும் பேரழகுடன், கையில் திருவோடு ஏந்தி பிட்சாடனர் வேடம் தரிக்க, மகாவிஷ்ணு அழகிய மோகினி உருவம் கொண்டார். இருவரும் தாருகாவனம் செல்ல, பெண் வடிவில் வந்த மகாவிஷ்ணுவின் அழகில் மயங்கிய முனிவர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அதேபோல் சிவனின் பேரழகைக் கண்ட முனிவர்களின் மனைவியர், கற்புநெறி மறந்து அவர் பின்னால் செல்லத் தொடங்கினர். தங்களது மனைவிகள் பிட்சாடனர் பின்னால் செல்வதைக் கண்ட முனிவர்கள், அவரை அங்கிருந்து விரட்டினர். ஆனால் அவர் செல்ல மறுத்துவிட்டார். முனிவர்கள் அவரை அழிக்க யாகம் செய்து, யாக குண்டத்திலிருந்து தோன்றிய புலிகளை ஏவினர். சிவபெருமான் அவற்றைக் கொன்று தோலை ஆடையாக்கிக்கொண்டார். பின்னர் பாம்பையும், பூதகணங்களையும் ஏவினர். எதை செய்தும் அவர்களால் வெற்றிகொள்ள முடியவில்லை. அவரை அழிக்க முடியாமல் முனிவர்கள் குழம்பி நின்றபோது, சிவபெருமான் அவர்கள் முன் காட்சியளித்தார். வந்தவர் இறைவன் என்பதை அறிந்த முனிவர்கள் அவரிடம் தஞ்சமடைந்து, தங்களை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டனர். சிவபெருமன் அவர்களுக்கு குருவாக இருந்து மன்னித்து, தாருகாவனேஸ்வரராக, சுயம்புலிங்கமாக மாறி காட்சியளித்தார்.

Thiruparaythurai – Gopura inside view
கோவிலில் சந்நிதிகள் அமைப்பு: ஈசன் பீக்ஷாடனராய் சென்று தாருகா வன முனிவர்களின் கர்வத்தை அடக்கி அவர்களுக்கு அருள் புரிந்தமையால் ‘தாருகா வனேஸ்வரர்’. இந்திரன், குபேரன், சப்த ரிஷிகள் பூஜித்து பேறு பெற்ற ஷேத்ரம். அன்னையின் நாமம் ஹேமவர்ணாம்பாள், பசும் பொன் மயிலாம்பாள். ஸ்தல வ்ரிக்ஷம், தீர்த்தம் – தெரிந்ததுதானே. அப்பர், சம்பந்தரால் பாடப் பெற்ற தலம். கொடிமரம், பலி பீடம், நந்திகேஸ்வரர் சேர்ந்திருக்கும் நந்தி மண்டபம். இம்மண்டப தூண்களில் அப்பர், சம்பந்தர், மாணிக்க வாசகர் மற்றும் திருப்பணி செய்த செட்டியாரின் உருவங்களும் உள்ளது. வெளிப் பிராகாரத்தில் விநாயகர், தண்டபாணி. அடுத்த மண்டபம் ஐந்து நிலைகளை உடையது. நேரே கிழக்கு நோக்கிய மூலவர் சன்னதி. ஏழு நிலை ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், உள்சுற்றில் வலம்புரி விநாயகர், சப்த கன்னியர், அறுபத்து மூவர், சோமஸ்கந்தர், மஹா கணபதி, பஞ்ச பூத லிங்கங்கள், ஆறுமுகர், பீக்ஷாடனார், பிரம்மா, துர்க்கை, கஜலக்ஷ்மி, பன்னிரு கைகளுடன் மயிலேறிய ஷண்முகர், நவக்ரகங்கள், பைரவர். கோஷ்டத்தில் விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, அர்த்த நாரிஸ்வரர், பிரம்மா, துர்க்கை. சண்டேஸ்வரர், நடராஜர்….துவார பாலகர்களை கடந்து உள்ளே சென்றால் மூலவர் தரிசனம். அம்பாள் சன்னதி தெற்கு நோக்கி. தூண்களில் ஊர்த்துவ தாண்டவம், எதிரில் காளி. இக் கோவிலுள்ள நவகிரகங்களுள் சனிபகவானுக்கு மட்டுமே வாகனம் உள்ளது, ஏனையோருக்கு வாகனமில்லை. முதற் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டது இத்திருக்கோயில். இக்கோவிலின் கல்வெட்டில் இத்தலம், “உத்தம சீவிச் சதுர்வேதிமங்கலத்துத் திருப்பராய்த்துறை” என்றும்; இறைவன் பெயர் “பராய்த்துறை மகாதேவர் ” என்றும்; “பராய்த்துறைப் பரமேஸ்வரன்” என்றும் குறிக்கப்படுகிறது.

Thiruparaythurai entrance.garbagruha

Thiruparaythurai – prakara – LHS

Thiruparaythurai – saptamata and nalvar

Thiruparaythurai – saptamata

Thiruparaythurai – pillared mantap.backside
தாருகாவன விவரங்கள் எப்படி வடக்கிலிருந்து தெற்கு திசைக்கு வந்தன?: சிவபுராணத்தின் படி தாருகா மற்றும் தாருகி என்ற அரக்கர்கள் குறிப்பிட்ட காட்டில் வாழ்ந்து வந்ததனால் அக்காடு தாருகா வனம் என்ற பெயர் பெற்றது. பிறகு தாருகா, துவாரகா என்று ஆகியது என்றும் சொல்லப்படுகிறது. அது நாகேஸ்வரர் என்ற பெயருடைய பன்னிரெண்டு ஜோதி-லிங்கங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது. தாருக என்ற பெயரில் நேபாளத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் உள்ளது. அங்கு காய்கறிகளும், ஜல்லிக்கட்டும் பிரசித்தி பெற்றுள்ளன. இருப்பினும் தமிழில் எழுத்துக்கள் இல்லாத நிலையில் ஏற்பட்ட குழப்பம் அல்லது அதற்கு ஏற்றபடி உள்ளூரில் புனையப்பட்ட கதையாக இந்த ஸ்தல புராணம் உண்டாக்கப் பட்டது போல்த் தோன்றுகிறது. வடக்கு மற்றும் வடமேற்கில் உள்ள வனம் / காடு, தென்னாட்டில், திடீரென்று வருவதற்கு எந்த காரணமும் புலப்படவில்லை.

Thiruparaythurai – pillared mantap
ஜைன–பௌத்த இடைசெருகல்கள் இடைக்கால புராணங்களில் வெளிப்படுவது: தமிழகத்தைப் பொறுத்தவரையில் இடைக்காலத்தில் தான் புராணங்கள் எழுதப் பட்டு, வெளிவந்துள்ளன என்பது அறியப்படுகிறது. கந்தபுராணம்[1], திருவிளையாடல் புராணம்[2], பெரியபுராணம்[3] போன்றவையெல்லாம் இடைக்காலத்தில் தான் வெளிவந்தன. கம்பர் எப்படி வால்மீகி ராமாயணத்தை தமிழில் எழுதினாரோ, அதேபோல இப்புராணங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் தமிழகத்தில் முக்கியமாக ஜைனர், பௌத்த மற்றும் சைவ பிரிவினர்களுக்கு இடையே மத ரீதியான மோதல்கள் இருந்து வந்துள்ளன. ஜைனர்கள் ஏற்கனவே தமிழ் இலக்கியங்களில் பல இடைசெருகல்களை செய்துள்ளார்கள். அதேபோல புராணங்கள் என்று வரும்போது, முன்பு ஜைனராக-பௌத்தராக இருந்து சைவர்களாக மாறினர் என்பதால், தமது தாக்கத்தை பதிவு செய்யும் வகையில் அவர்கள் புராணங்களிலும் சைவ-வைணவ கடவுளர்களை உயர்த்திப் பிடிக்கும் நோக்கில் எழுதினாலும், அவர்களை இழிவுபடுத்தும் கவனத்திலும் இத்தகைய கதைகள் புனையப் பட்டன என்பதனை, இத்தகைய கதைகளின் போக்கிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அதனால் தான், ஸ்தலபுராணங்கள் குழம்பிக் கிடக்கின்றன மற்றும் அவற்றில் காலம் பற்றி கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

Thiruparaythurai – Saptamata from Chidbhavananda website
தாருகாவனம் வடக்கிலிருந்து, தெற்கில் வந்த கட்டுக்கதை எடுத்துக் காட்டுவது என்ன?: இந்த தாருகாவன கதைகளில் தெரியவரும் முக்கிய அம்சகள் என்னவென்பதை நாம் சுலபமாக கண்டறியலாம்:
- யாகங்களுக்கு எதிரியாக கருத்துருவாக்கம் ஏற்படுத்துவது
- ரிஷிகள், பிராமணர்களை இழிவு படுத்துவது
- குறிப்பாக ரிஷிகளின் மனைவிகள் ஏதோ அபச்சாரம், விபச்சாரம் செய்தது போல சித்தரிப்பது.
- விஷ்ணு சிவன் கடவுளர்களை கேலி செய்வது, கொச்சைப்படுத்துவது
- இரு கடவுளர்களும் ஆண் பெண் வேடமிட்டு செல்வது போல சித்தரிப்பது
- அதனை வைத்து இவர்களுக்கும் ஐயப்பன் பிறந்தான் என்ற இன்னொரு கதையை உருவாக்குவது.
- பௌத்தம் அல்லது ஜைனம் அல்லாதவர்களுக்கு, இக்கதைகளினால் எந்த பலனும் இல்லை அவர்களுக்கு தேவையான விஷயங்களை இல்லை
- அதாவது எந்த சைவனும் அல்லது வைணவனும் இத்தகைய கதைகளை உருவாகியிருக்க முடியாது.
- ஏனெனில், அவை அவர்களையே பழிப்பது, தூஷிப்பது மற்றும் கேவலப்படுத்துவது போன்று உள்ளது.
- ஆகவே, இக்கதை மற்றும் இதர புனைப்புகள் எல்லாமே ஜைனர் மற்றம் பௌத்தர்களால் உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.
- அதனால்தான் பெரியபுராணத்தில் சைவர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள் எப்பொழுதுமே ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு இருப்பது போலவே சித்தரிக்கப்பட்டுள்ளது.
- கடவுள் மறுப்பு, இறையியல் சித்தாந்தம் முதலியவை மற்ற விஷயங்களிலும் உண்மையிலேயே மோதல்கள் நடைபெற்றனவா, தோற்றவர்கள் தண்டிக்கப் பட்டனரா அல்லது தாமே ஏற்றுக் கொண்டனரா என்பது ஆராய்ச்சிக்குரியவை.
எனினும் மேற்குறிப்பிட்ட கருத்துகள், அவர்களின் விஷமத்தனமான பிரயோகம் மற்றும் அதன்படி புராணங்கள்தௌருவாக்கப் பட்டன என்பதனை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
சரித்திர ஆதாரமிலாதவற்றை நீக்கி, ஸ்தலபுராணங்கள் முறைப்படுத்த வேண்டும்: சைவம் வளர்ந்த பின்னர் கதைகள் எல்லாம் விசுவாசத்துடன், நம்பிக்கையுடன் மற்றும் பக்தியுடன் பல ஸ்தல புராணங்களில், நிலை நிறுத்தப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான கோவில்கள், பல்வேறு இடங்களில் கட்டப்பட்டு இருக்கும்போது, எவ்வாறு வேதகால முனிவர்கள்-ரிஷிகள், இதிகாச காலத்து புருஷர்கள், முதலியோர் அங்கும் இங்குமாக வந்து சென்று இருக்க முடியும் என்பதனை கவனிக்க வேண்டும். மகாபாரதத்தின் காலம் 3102 BCE என்று ஏற்றுக்க்கொண்ட பிறகு, அகழ்வாய்வு ஆதாரங்கள் எதுவுமே இல்லாத நிலையே அவர்கள் இங்கு வந்தார்கள், சப்தரிஷிகள் கோவில்களிலும் இருந்தார்கள் அதாவது அந்த இடங்களில் இருந்தார்கள், ராமன் லட்சுமணன் சீதை எல்லாம் அங்கு தங்கினார்கள் என்றெல்லாம் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ற வகையில் மாற்றி எழுது வருவது சரித்திர உண்மை ஆகாது. பக்திப்பூர்வமாக நம்புகின்ற ஏற்றுக்கொள்ள கூடிய நிலையில் இருந்தாலும், சரித்திரத்துக்கு புறம்பாககைருக்கும்போது, மற்ற விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது. இன்று குறிப்பிடப்படும் 800-1000 ஆண்டு சரித்திர நிகழ்வுகளை, முறையாக காலக்கிரமமாக, பட்டியலிட்டால் இந்தக் குளறுபடிகளை நிவர்த்தி செய்து விடலாம். இதற்கான முயற்சியை ஆராய்ச்சியாளர்கள் பண்டிதர்கள் மற்றவர்கள் ஈடுபட வேண்டும்.
© வேதபிரகாஷ்
17-05-2019
[1] 12ம் நூற்றாண்டில், கச்சியப்ப சிவாச்சாரியாரால் இயற்றப் பட்டது. ராமாயணத்தைத் தழுவி, கந்த புராணம் இயற்றப்பட்டது என்றும் எடுத்துக் காட்டுவர், சில ஆராய்ச்சியாளர்.
[2] 16 ஆம் நூற்றாண்டில் பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்டது.
[3] பெரியபுராண விவரங்கள் 350 – 1113 காலகட்டத்தைக் காட்டுகிறது. எனவே 12ம் நூற்றாண்டில் தொகுக்கப் பட்டது எனலாம்.