தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், அதன் சிறப்பு, காலம், அழகிய சிற்பங்கள், இன்றுள்ள நிலை (1)!

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், அதன் சிறப்பு, காலம், அழகிய சிற்பங்கள், இன்றுள்ள நிலை (1)!

தாரமங்கலம் -கூகுள் மேப்

தாரமங்கலம் -கூகுள் மேப்

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் இருப்பிடம்: அடுத்தது எங்கள் விஜயம் தாரமங்கலம்! சேலத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில், ஓமலூர்-சங்ககிரி செல்லும் சாலையில் அமைந்துள்ளது இந்த ஊரில் அழகிய, நுண்ணிய வேலைப்பாடுகள் உள்ள சிற்பங்கள் கொண்ட கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திறது. மேற்கு பார்த்தபடி அமைந்துள்ள இந்த ஆலயத்தின் ஐந்து நிலைகளை கொண்ட இராஜகோபுரம் 90, அடி உயரமுடையது. அதன் நுழைவாயிலில் மேலே செல்வதற்கும், காவல் இருப்பதற்கும் ஏற்ற அமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. வாசலில், இருபது அடி உயரமுள்ள இரட்டைக்கதவு “வேங்கை” மரத்தினால் செய்யப்பட்டது. இந்த கதவின் முன்பக்கத்தில் ஓவ்வொரு கதவிலும் 60 உலோக குமிழ்கள் வீதம் 120 குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளது. யானைகளை கொண்டுவந்து மோதவிட்டு கதவுகளை உடைக்கும் வழக்கமுள்ள அந்த காலங்களில் யானை மோதி கதவை உடைக்க முடியாதபடி யானையின் மண்டையை கிழிக்கும் வகையில் இந்த குமிழ்கள் சிறந்த நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. கிழக்குப் பக்கத்திலும், ஒரு நுழைவு வாயில் உள்ளது, என்று விவரிக்கப்பட்டுள்ளது.பிறகு எப்படி மாலிக்காபூர் வந்து கொள்ளையடித்தான் என்பதனை இன்னும் அவ்வாறு விவரித்து எழுதியவர்கள் உணரவில்லை போலும்!

கோவில், குளங்கள் முதலியவற்றின் இருப்பிடம்: கோவிலின் பிரதான நுழைவுவாயில் பெரிய கோபுரத்துடன் மேற்கு பக்கம் உள்ளது. அவ்வாயிலுக்கு முன்பாக திறந்த வெளியிடமும் உள்ளது. கோபுரத்திலிருந்து சுமார் 150 அடிகள் தொலைவில் கொடிக்கம்பம் காணப்படுகிறது. ஆனால், நந்தி, பலிபீடம் காணப்படவில்லை. அந்த வெளியிடத்தில் வழக்கமாக மண்டம் இருந்திருக்க வேண்டும், ஆனால், இங்கு அத்தகைய முயற்சி 375 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளபட்டு பிறகு அது நின்றுவிட்டது என்று தெரிகிறது. கோவிலின் வடமேற்கு திசையில் கிடக்கும் தூண்கள் அதனை எடுத்துக் காட்டுகிறது. கிழக்குப்பக்கத்திலும் ஒரு நுழைவுவாயில் உள்ளது, ஆனால், கோபுரம் இல்லை. இந்த வாசலிலிருந்து தூரத்தில் வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு திசைகளில் இரண்டு குளங்கள் இருக்கின்றன. கோவில், தூண்கள், குளங்கள் முதலியவற்றின் இருப்பிடங்களை கூகுள் வரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளன. இவற்றின் அமைப்பைப் பார்க்கும் போது, இவையெல்லாமே, முன்னர் இருந்த ஒரு பெரிய கோவில் வளகத்தில் இருந்திருக்கக் கூடும் என்று தெரிகிறது. கடந்த 375 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள், சாலை போடுதல், விரிவாக்கம் போன்ற காரியங்களினால், இவை இன்று தனித்தனியாக இருப்பது போல காட்சியளிக்கிறது. இடையிடையே வீடுகள் கட்டப்பட்டுள்ளதும் தெரிகிறது. கோவிலைச் சுற்றி நான்கு பிரதான வீதிகள் இருக்கும், அவை இத்தகைய மாற்றங்களினால் காணவில்லை.

சிற்பவேலைப்பாடு கொண்ட தூண்கள்: பொதுவாக, இக்கோவிலின் முன்னர், உள்பிரகாரத்தின் முன்னால் மற்றும் உள்ளே கர்ப்பகிருகத்தைச் சுற்றியுள்ள தூண்களிலேயே சிற்பங்கள் உள்ளன. அவற்றில் யாழியின் வாயில் உள்ள ஒரு கற்பந்து உருளும் விதத்தில் உள்ளது, ஆனால், வெளியே வராது. அதாவது, சிற்பி அவ்விதமாக செக்கியுள்ளார். உள்ளே கர்ப்பகிரகத்தைச் சுற்றியுள்ள தூண்களில் அழகிய, நுண்ணிய வேலைப்பாடுகள் உள்ள சிற்பங்கள்! ஒவ்வொரு தூணிலும் ஒரு சிற்பம். குறிப்பாக சிவன் – பார்வதி சிற்பங்கள், தொலைவில் மன்மதன் ஒளிந்துள்ளான். தெரிந்த கதைதான். ஆனால், சிற்பி அதனை தத்ரூபமாக வடித்துள்ளான். மன்மதன் ஒளிந்துள்ளான். அதன்னால், மன்மதன் பக்கத்திலிருந்து பார்த்தால் அவர்கள் தெரிவார்கள், ஆனால் அவர்கள் பக்கத்திலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியமாட்டான். அதே போல வாலி – சுக்ரீவன் கதையும் தூண்களில் உள்ள சிற்பங்களில் உள்ளது! இவற்றைப் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கோவிலின் தொன்மை, காலம் முதலியன: கோவிலின் தொன்மை நிச்சயமாக 9-10நூற்றாண்டுகளுக்குச் செல்கிறது. கோவில் பிரகாரத்தில் வலது பக்கத்தில் தனியாக உள்ள பிள்ளையார் மற்றும் சிவன் சன்னிதிகள், அவற்றின் சுற்றுகள் பூமியில் புதைந்துள்ள விதம், சுற்றுப்புற சுவற்றில் உள்ள சிற்பங்கள் அவற்றின் தொன்மையினைக் காட்டுகின்றன. இப்பொழுது நிலையிலுள்ள பிரதான கோவில், 17ம் நூற்றாண்டில் மும்மிடி கட்டி முதலி வம்சத்தினரால் கட்டப்பட்டுள்ளது. மும்மிடி கட்டி முதலியார் ஆரம்பித்து சியாழி கட்டி முதலியார் தொடர்ந்து, வணங்காமுடி கட்டி முதலியார் முடித்துள்ளார். அதற்கு அடையாளமாக மைய மண்டபத்திம் முன்பாக மூன்று பிள்ளயார் சிலைகள் வைத்து வழிபடப்படுகிறது, இந்த மூன்று சிலைகளும் மூன்று தலைமுறைகளை குறிக்கிறது[1]. மேற்கு பார்க்கும் கோவில் பகுதி 13ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஹொய்சளர்களின் “புலியைக் கொல்லும் வீரன்” [ஹோய் சளா = ஏய் புலியைக்கொல், புலிகடிமால்] சிற்பம் காணப்படுவதால், அக்காலம் காட்டுகிறது.

கல்வெட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்: உள்ள கோவிலை மராமத்து செய்வது, சுற்றி பிரகாரங்கள் கட்டுவது, மதிற்சுவர் கட்டுவது என்பது தொடர்ந்து நடந்துள்ள செயல்கள் தாம். இருப்பினும், என்னென்ன செய்கிறோம், முன்னர் எப்படி இருந்தது, மாற்றம் என்ன நேர்ந்தது, என்பதனை ஆவணப்படுத்தி வைத்து, அருகிலேயே புகைப்படங்களை வைத்தால், புதியதாக வருபவர்கள் அறிந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும்[2].  இங்குகூட உதாரணத்திற்கு, ரங்கப்பிள்ளை மற்றும் வையாபுரி பிள்ளை என்ற இரு சகோதரர்கள் 29-09-1935 அன்று திருவாதிரை உஸ்தவத்திற்கு, பிரதி வருடம் ரூ.2,000/- கொடுப்பதாக ஒப்புக்கொண்ட கல்வெட்டுக் காணப்படுகிறது. இக்காலத்தில் பத்திரங்களில் கையுப்பம் போட்டுக் கொடுப்பது, கல்வெட்டிலேயே காணப்படுகிறது. இதேபோல மற்ற கோவிலுக்கு தானமாகக் கொடுக்கப்பட்ட நிலங்கள், திருப்பணி, மராமத்து செய்த விவரங்களைப் பற்றிய கல்வெட்டுகள் இருக்கக் கூடும். ஆனால், இக்காலத்தில் அவற்றை அப்புறப்படுத்திவிடுகிறார்கள், இதனால், உண்மைகளும் மறைக்கப்பட்டு விடுகின்றன, மறைந்து போய் விடுகின்றன.

சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழும் காட்சி: வருடத்தில் ஒரு முறை பிப்ரவரி மாதத்தில் பிப்ரவரி 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களில் சூரியன் மறைவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பு தேர்நிலையம் அருகில் உள்ள எல்லை நந்தி, கொடி கம்பம் அருகில் உள்ள அதிகார நந்தி மூலஸ்தானத்தில் உள்ள பிரகார நந்தி ஆகியவற்றின் கொம்புகளின் இடையே சூரிய ஒளி பாய்ந்து வந்து சிவலிங்கத்தின் தலைப் பகுதியில் விழும்[3]. இது சிவப்பெருமானின் தலையில் உள்ள பிறை நிலவு என பக்தர்கள் கூறுகிறார்கள். மேற்கு பக்கம் பார்க்கும், குறிப்பிட்ட நாட்களில் சூரிய ஒளி விழும் வண்ணம் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது[4]. மாசி 9,10,11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுகிறது / சூரியன் ஒளிக்கற்றை, கோபுரத்தின் வழியாக சென்று, ஒரு துவாரத்தின் வழியாக சிவலிங்கத்தின் மீது விழுகிறது. இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி இது. இப்படி அமைத்ததற்கு கோவில் கட்டியவர்கள், சிற்பிகள் முதலியோர் விஞ்ஞானம், இஞ்சினியரிங் படித்தார்களா என்று யாரும் கேட்கவில்லை போலும்! அக்காலத்தில், அதாவது 400 ஆண்டுகளுக்கு முன்னர் அததகைய ஞானத்தை, கல்வியை, தொழிற்நுட்பத்தை அவர்களுக்கு எப்படி வந்தது, யார் போதித்தது என்பது பற்றியெல்லாம், இப்பொழுது யாரும் யோசித்துப் பார்ப்பதில்லை, ஆராய்ச்சி செய்வதும் இல்லை. இவர்கள் எல்லோருமே பார்ப்பனர்களாக இருக்க முடியாது. அப்படியென்றால், இவர்கள் எந்த குருகுலத்தில், இவற்றையெல்லாம் கற்றுக் கொண்டார்கள் என்ற கேள்வி எழுகின்றது.

பாதாள லிங்கம், சுரகேசுவரர் முதலியன: இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி பாதாளலிங்கம் சன்னதியாகும், மகாமண்டபத்தின் வடமேற்கு மூலையில், தலத்தின் கீழ்பகுதியில் ஒரு காற்று புக முடியாத அறைக்குள் இருக்கும் இந்த பாதாள லிங்கத்திற்கு பச்சை கற்பூரம் வைத்து செவ்வாய் கிழமை தோறும் அபிஷேகம் செய்தால் கல்யாண பாக்கியம், புத்திர பாக்கியம் மற்றும் தொழில் விருத்தி ஆகியவை கை கூடுகின்றன என்கிறார்கள்[5]. கோயிலின் உட்பிரகாரத்தில், தெற்கு பார்த்த நிலையில் ஜுரகரேஸ்வரர் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கிறார்[6]. இவர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது சிறப்பு. இவருக்கு ஞாயிற்று கிழமைகளில் விபூதி கொண்டு அர்ச்சனை செய்து அதை தினமும் நெற்றியில் இட்டு வந்தால் தீராத ஜூரமும் தீர்ந்துவிடும் என்கிறார்கள். தவிர மிளகு ரசம் வைத்து சாதம் படைத்து வடைமாலை சாத்தி அபிஷேகம் செய்தால் காய்ச்சல் மற்றும் தீராத வியாதிகள் குணமடைகின்றன என்கிறார்கள். பகுத்தறிவவாதிகள், இக்கால அறிவிஜீவிகள் இந்த விபூதி, ரச முதலியவற்றை சோதனைச் சாலைகளுக்கு அனுப்பி, சோதித்து அவற்றிர்கு அத்தகைய நோய் தீர்க்கும் சக்தி உள்ளதா- இல்லையா என்று ஆராய்ச்சி செய்து பார்க்கலாம். மூடநம்பிக்கை இருந்தால் கிழிகிழியென்று கிழிக்கலாம். ஆனால், பாவம் பேன் / மின்விசிறி வேலை செய்யவில்லை என்று 2010ல் பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்![7]

வேதபிரகாஷ்

26-01-2015

[1] ஆத்தூர் பெ.சிவசுப்ரமணியம், வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!, நக்கீரன் வார இதழ்.

[2] சோமநாதபுர கோவில் வாசலில், வலது பக்கத்தில் அவ்வாறான புகைப்படங்கள் வைத்திருப்பதை காணலாம்.

[3] http://www.maalaimalar.com/2014/02/18123509/sun-light-emitted-in-the-templ.html

[4] மாலைமலர், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிபடும் அதிசய காட்சி, பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 18, 2014; 12:35 PM IST; மாற்றம் செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 18, 2014; 12:36 PM IST;

[5] http://temple.dinamalar.com/New.php?id=486

[6] http://temple.dinamalar.com/New.php?id=486

[7] தினமலர், தமிழ்நாடு கைலாசநாதர் கோவிலில் பாதாள லிங்கத்தை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பும் பக்தர்கள், அக்டோபர்.17, 2010.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in ஓமலூர், கட்டி முதலியார், கெட்டி முதலியார், சேலம், தாரமங்கலம், மாலிகாபூர், முதலியார், மும்மிடி, வணங்காமுடி, ஹொய்சளர் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், அதன் சிறப்பு, காலம், அழகிய சிற்பங்கள், இன்றுள்ள நிலை (1)!

  1. Pingback: ஒகையூர் கிராமம், ஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், சப்த மாதர், அவற்றின் சிறப்பு முதலியன [1] | உழவ

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s